Wednesday, April 13, 2011

வேண்டாம் வரதட்சணை

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அல்குர்ஆன் 4:4)

    ஒவ்வொரு ஆண் மகனும் திருமணம் செய்யும்போது மனைவிக்கு மஹர் எனும் மணக் கொடை வழங்க வேண்டும் என்று திருக்குர்ஆனின் 
வ்வசனம் கட்டளையிடுகிறது .முஸ்லிம் சமுதாயத்தில் அங்கம் வகிக்கின்ற பலர் திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வரும் அவல நிலையை நாம் பார்க்கிறோம். இந்த அவலத்திற்கு ஊர் ஜமாஅத்தினரும் மார்க்க அறிஞர்களும் ஒத்துழைக்கக் கூடியவர்களாகவோ அல்லது கண்டு கொள்ளாதவர்களாகவோ இருப்பதையும் பார்க்கிறோம்.

    வரதட்சணை கொடுமை வசதியில்லாத காரணத்தினால் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்சிகள், மணவாழ்வு தள்ளிப் போகும் ஏக்கத்தால் பெண்கள் மனநோயாளிகளாகிப் போகும் நிகழ்சிகள் அன்றாடம் நடந்தாலும் இவையெல்லாம் சமுதாயத்தின் கல் மனதைத் கரைப்பதாக இல்லை.

    தக்க தருணத்தில் மணமாகாத காரணத்தால் பெண்கள் வழிதவறிச் செல்வதும், அதன் காரணமாக அந்தக் குடும்பமே அவமானத்தால் தலை குனிவதும் பல ஊர்களில் அன்றாட நிகழ்சிகளாகிவிட்டன. சமுதாயத்துக்கே இதனால் அவமானம் ஏற்ப்பட்டாலும் சமுதாயத்துக்கு ரோஷம் வருவதாகத் தெரியவில்லை.

    பெண் குழந்தையை பெற்றெடுத்த காரணத்துக்காக ஊர் ஊராகப் பிச்சை எடுத்துத் தான் வரதட்சனை தரப்படுகிறது என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் அந்தப் பிச்சைப் பணத்தை வாங்குவதற்கு ஆண்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை. உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் பிறந்த குழந்தையின் வாய்க்குள் நெல்லைப் போட்டு சாகடிக்கும் செய்திகளும், நகர்ப்புறங்களில் கருவில் பெண் குழந்தை இருப்பதை ஸ்கேன் மூலம் தெரிந்து கொண்டு கருவிலேயே சமாதி கட்டும் செய்திகளும் இடம் பெறாத நாளே இல்லை.

    இதற்கெல்லாம் காரணம் வரதட்சணைக் கொடுமை தான் என்பது நன்றாகத் தெரிந்த்திருந்தும் இந்தக் கொடுமையிலிருந்து விலகிக் கொள்ள முஸ்லிம் சமுதாயம் மறுத்துவருகிறது. இந்திய அரசாங்கம் வரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்று அறிவித்து இருந்தாலும் நடைமுறைப் படுத்தாத இந்தச் சட்டத்தால் எந்த முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. ஆங்காங்கே வரதட்சனையை ஒழிப்பதற்கு பல வகையான  பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

    இல்லற  வாழ்கையில்  இருவரும்  மகிழ்சி  அடையும்  போது  இருவருக்கும்  சமமான  பங்கு இருக்கும் போது யாரும் யாருக்கும் வரதட்சனை கொடுக்கத் தேவையில்லை. என்று பெண்கள் இயக்கங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் திருமறைக் குர்ஆனோ வரதட்சனையைக் ஒழித்துக் கட்டுவதில் உலகத்துகே முன்னணியில் நிற்கிறது.

    ஆணும் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டாம்! பெண்ணும் ஆணுக்குக் கொடுக்க வேண்டாம் என்று கூறாமல் ஆண்கள் பெண்களுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. உலகில் எந்த மார்க்கமும் - இயக்கமும் கூறாத வித்தியாசமான கட்டளையை இஸ்லாம் பிறப்பிக்கிறது.

    யாரும் யாருக்கும் எதையும் கொடுக்க வேண்டியதில்லை என்பதைவிட ஆண்கள் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்மென்பதை தான் நியாயமானது. அறிவுப்- பூர்வமானது. என்பதைச் சிந்திக்கும் போது உணரலாம்.

    மணவாழ்வில் இணையும் இருவரும் சமமாக இன்பம் அடைகிறார்கள் என்பது உண்மை என்றாலும் மணவாழ்வின் காரணமாக அதிகமான சுமைகள் பெண்கள் மீது தான் உள்ளது. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் தான் அவற்றைச் சுமந்தாக வேண்டும்.

    திருமணம் முடிந்தவுடன் ஆண்கள் தமது வீட்டில் தமது உறவினர்களுடன் வழக்கம் போலவே இருந்து வருவார்கள். ஆனால் பெண்கள் தனது தாய், தந்தை, உற்றார், உறவினர், ஊர் அனைத்தையும் தியாகம் செய்து வருகின்றனர். பிறந்த வீட்டை மறந்து விடுவதை சாதாரணமானதாகக் கருத முடியாது. பெண்களில் இந்த தியாகத்துக்காக ஆண்கள் பெண்களுக்குக் கொடுப்பது தான் நியாயமானது.

    பிறந்த வீட்டில் தனது வேலையைக் கூட பார்த்துப் பழகாதவள் புகுந்த வீட்டில் கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் குடும்பத்திற்காகவும் பணிவிடைகள் செய்கிறாள். நாள் முழுவதும் புகுந்த வீட்டுக்காக உழைக்கிறாள். ஆண்கள் பெண்களின் இந்த தியாகத்துக்காக கொடுப்பது தான் நியாயமானது.

    இருவரும் இல்லறத்தில் ஈடுபட்டதால் பெண் கர்ப்பம் அடைந்தால் அதனால் அவளுக்கு ஏற்படும் சிரமம் சாதரணமானது அல்ல. எதையும் உண்ணமுடியாது. ஆசைப்பட்டதை உண்டவுடன் வாந்தி எடுக்கிறாள்! நாள் செல்லச் செல்ல இயல்பான அவளது எல்லா நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன. இயல்பாக நடக்க முடியாது. இயல்பாக படுக்க முடியாது. இப்படிப் பல மாதங்கள் தொடர்ந்து சிரமம் அடைகிறாள்.

    இவள் அந்த நிலையைக் அடைவதற்குக் காரணமாக இருந்த ஆண் தந்தையாகப் பொவதற்கு கடுகளவு சிரமத்தையும் அடைவதில்லை. இந்த தியாகத்துக்காகவே பெண்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும்  கொடுக்கலாம். அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது மரணத்தின் வாசலைத் தட்டி விட்டு மறுஜென்மம் எடுக்கிறாள். செத்துப் பிழைக்கிறாள். இதற்கு நிகரான ஒரு  வேதனையை உதாரணமாகக் கூட எடுத்துக் காட்ட இயலாது.

    ஆண் மகனின் வாரிசைப் பெற்றுத் தருவதற்காக -அவள் படுகிற சிரமத்திற்காக ஆண்கள் கொடுப்பது தான் நியாயமானதாகும்.. இந்த ஒரு சிரமத்துக்காக கோடி கோடியாக கூட கொடுக்கலாம். குழந்தையைப் பெற்றெடுத்தபின் இரண்டாண்டுகள் தூக்கத்தை தியாகம் செய்து கண் விழித்து பாலூட்டி வளர்க்கிறாள். தனது உதிரத்தையே உணவாகக் கொடுத்து இவனது வாரிசை வளர்க்கிறாள்!
    கழுவிக்குளிப்பாட்டி சீராட்டி அழகு பார்க்கிறாள்! ஒவ்வொரு பருவத்திலும் குழைந்தைக்காக தன்னையே அர்ப்பணித்து விடுகிறாள்! இதற்காகவும் ஆண்கள் தான் கொடுக்கவேண்டும். இப்படிச் சிந்த்தித்துப் பார்த்தால் இன்னும் பல காரணங்களைக் காணலாம். இதன் காரணமாகத் தான் ஆண்கள் பெண்களுக்கு மஹர் எனும் மணக்கொடையை மனமுவந்து வழங்கிட வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

    மணக் கொடை என்பது நூறோ இருநூறோ வழங்கி ஏமாற்றுவது அல்ல! நமது  சக்திக்கும் வசதிக்கும் ஏற்றவாறு தாராளமாக வழங்குவதே மஹர் என்பதை இதிலிருந்து விளங்கலாம். ஒரு  குவியலையே கொடுத்தாலும் அதிலிருந்து திரும்பப் பெறாதீர்கள் (அல்குர்ஆன் 4:20) என்று கூறுவதன் மூலம் மஹர் என்னும் மணக்கொடைக்கு அளவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான்.

    பெண்களுக்கு வரதட்சனைக் கொடுத்து மண முடிக்க வேண்டிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெண்களிடமே கேட்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை உணரவேண்டும். கொடுக்காமல் இருந்தது ஒரு குற்றம். வாங்கியது மற்றொரு குற்றம் என்று இரண்டு  குற்றங்களைச் சந்திக்கும் நிலை மறுமையில் ஏற்படும் என்பதையும் உணரவேண்டும்.

    வரதட்சனை வாங்கும் திருமணங்களை ஜமாஅத்துக்கள் அடியோடு புறக்கணிக்கும் நிலையை உருவாக்கி அல்லாஹ்வின் கட்டளைக்கு உயிரூட்ட வேண்டும். இளைய சமுதாயம் வரதட்சணையினால் ஏற்படும் அவலங்களை உணர்ந்து அந்த  மூடப் பழக்கத்தை உடைத்து எறிந்திட முன்வர வேண்டும்! வல்ல  இறைவன் இதற்கு அருள் புரியட்டும்!

இப்னு மர்யம்

Thursday, April 7, 2011

வரதட்சனை ஒழிப்பில் உலமாக்களின் பங்கு

முஸ்லிம் சமூகத்தில் தலைவிரித்தாடும் பாரிய சமூகக்கொடுமை வரதட்சனை. இந்தக்கொடுமையை ஒழிக்க இன்று காத்திரமான ஓர் இளைஞர் அணியே திரண்டிருக்கின்றது. ஏகத்துவப் பிரச்சாரத்தின் எழுச்சியே இவ்விளைஞர்களை இக்கொடுமைக் கொதிராக அணிதிரள வைத்தது என்றால் அதனை மறுப்பதற்கில்லை. முஸ்லிம் சமூகத்தின் மானத்தையும், மாரியாதையையும் குழிதோண்டிப் புதைத்த இக்கொடுமையை முற்றாக ஒழிக்க வேண்டுமாயின் இச்சமூகத்தின் அனைத்து சக்திகளும் ஒன்றுதிரள வேண்டும்.

அநியாயங்களுக்குத் துணைபோகாத ஒரு தலைமைத்துவத்தால் இக்கொடுமையை நிச்சயம் ஒழிக்க முடியுமென தவ்ஹீத்ஜமாத் உறுதியாக நம்புகின்றது. இக்கொடுமையால் முஸ்லிம் சமூகம் இன்றுவரை சந்தித்து வரும் பின்னடைவுகளை நாம் விளக்கத்தேவையில்லை. முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் இக்கொடுமைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க மார்க்க அறிஞர்கள் முன்வரவேண்டுமென தவ்ஹீத் ஜமாத் இச்சந்தர்ப்பத்தில் வேண்டிக்கொள்கின்றது.

எட்டு வருடங்கள், ஏழு வருடங்கள் மார்க்க அறிவைப் படித்துவிட்டு திருமண நேரத்தில் மாத்திரம் இஸ்லாத்தைக் கடாசி விடும் எத்தனையோ உலமாக்களைப் பார்க்கின்றோம். இதில் வெளிநாடுகளில் படித்து விட்டு வரும் பட்டதாரிகளும் விதிவிலக்கானவர்களல்ல. சீதனக்கொடுமையால் முஸ்லிம் சமூகமே சீரழியும் இந்நேரத்தில் மிம்பர் மேடைகளில் அதனைக் கண்டிக்காமல் அச்சீதனத் திருமணங்களிலும் கலந்து சிறப்பித்து வரும் இவ்வறிஞர்களை என்னவென்று அழைப்பது? தீர்ப்பாளர்களுக்கெல்லாம் தீர்ப்பாளன் அல்லாஹ் போதுமானவன்.

சீதன ஒழிப்பில் ஒரு மார்க்க அறிஞனின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. கொளுத்த சீதனத்தை வாங்கி ஏப்பமிடும் மாப்பிள்ளைகளும் ‘அல் பாத்திஹா’ச் சொல்லி சீதனக்கொடுமையைத் துவக்கி வைக்கும் இவ்வுலமாக்கள் அல்லாஹ்வை அதிகம் அஞ்சிக்கொள்ள வேண்டும்.

அனைத்து சமூகத்தினர்களுக்கும் மிகத்தெளிவாக விளங்கும் இக்கொடுமைக்கு ஆதரவு தெரிவிப்பதும் அல்லது அதனைக் கண்டுகொள்ளாமல் நடந்துகொள்வதும் ஆரோக்கியமானதல்ல.அல்லாஹ்வை அஞ்சி ஜம்இய்யதுல் உலமா நினைத்தால் இன்ஷாஅல்லாஹ் இக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். பொருப்பு வாய்ந்த இப்பணியை விட்டு விட்டு அலட்சியமாகவும், அசமந்தமாகவும் உலமாக்கள் நடந்துகொண்டால் நாளை வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் மார்க்க அறிஞர்களை உதாசீனம் செய்யும் அவல நிலை இச்சமூகத்திற்கு ஏற்படுமென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.






http://saynotodowry.blogspot.com/2011/04/blog-post.html