Wednesday, April 13, 2011

வேண்டாம் வரதட்சணை

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அல்குர்ஆன் 4:4)

    ஒவ்வொரு ஆண் மகனும் திருமணம் செய்யும்போது மனைவிக்கு மஹர் எனும் மணக் கொடை வழங்க வேண்டும் என்று திருக்குர்ஆனின் 
வ்வசனம் கட்டளையிடுகிறது .முஸ்லிம் சமுதாயத்தில் அங்கம் வகிக்கின்ற பலர் திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வரும் அவல நிலையை நாம் பார்க்கிறோம். இந்த அவலத்திற்கு ஊர் ஜமாஅத்தினரும் மார்க்க அறிஞர்களும் ஒத்துழைக்கக் கூடியவர்களாகவோ அல்லது கண்டு கொள்ளாதவர்களாகவோ இருப்பதையும் பார்க்கிறோம்.

    வரதட்சணை கொடுமை வசதியில்லாத காரணத்தினால் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்சிகள், மணவாழ்வு தள்ளிப் போகும் ஏக்கத்தால் பெண்கள் மனநோயாளிகளாகிப் போகும் நிகழ்சிகள் அன்றாடம் நடந்தாலும் இவையெல்லாம் சமுதாயத்தின் கல் மனதைத் கரைப்பதாக இல்லை.

    தக்க தருணத்தில் மணமாகாத காரணத்தால் பெண்கள் வழிதவறிச் செல்வதும், அதன் காரணமாக அந்தக் குடும்பமே அவமானத்தால் தலை குனிவதும் பல ஊர்களில் அன்றாட நிகழ்சிகளாகிவிட்டன. சமுதாயத்துக்கே இதனால் அவமானம் ஏற்ப்பட்டாலும் சமுதாயத்துக்கு ரோஷம் வருவதாகத் தெரியவில்லை.

    பெண் குழந்தையை பெற்றெடுத்த காரணத்துக்காக ஊர் ஊராகப் பிச்சை எடுத்துத் தான் வரதட்சனை தரப்படுகிறது என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் அந்தப் பிச்சைப் பணத்தை வாங்குவதற்கு ஆண்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை. உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் பிறந்த குழந்தையின் வாய்க்குள் நெல்லைப் போட்டு சாகடிக்கும் செய்திகளும், நகர்ப்புறங்களில் கருவில் பெண் குழந்தை இருப்பதை ஸ்கேன் மூலம் தெரிந்து கொண்டு கருவிலேயே சமாதி கட்டும் செய்திகளும் இடம் பெறாத நாளே இல்லை.

    இதற்கெல்லாம் காரணம் வரதட்சணைக் கொடுமை தான் என்பது நன்றாகத் தெரிந்த்திருந்தும் இந்தக் கொடுமையிலிருந்து விலகிக் கொள்ள முஸ்லிம் சமுதாயம் மறுத்துவருகிறது. இந்திய அரசாங்கம் வரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்று அறிவித்து இருந்தாலும் நடைமுறைப் படுத்தாத இந்தச் சட்டத்தால் எந்த முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. ஆங்காங்கே வரதட்சனையை ஒழிப்பதற்கு பல வகையான  பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

    இல்லற  வாழ்கையில்  இருவரும்  மகிழ்சி  அடையும்  போது  இருவருக்கும்  சமமான  பங்கு இருக்கும் போது யாரும் யாருக்கும் வரதட்சனை கொடுக்கத் தேவையில்லை. என்று பெண்கள் இயக்கங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் திருமறைக் குர்ஆனோ வரதட்சனையைக் ஒழித்துக் கட்டுவதில் உலகத்துகே முன்னணியில் நிற்கிறது.

    ஆணும் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டாம்! பெண்ணும் ஆணுக்குக் கொடுக்க வேண்டாம் என்று கூறாமல் ஆண்கள் பெண்களுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. உலகில் எந்த மார்க்கமும் - இயக்கமும் கூறாத வித்தியாசமான கட்டளையை இஸ்லாம் பிறப்பிக்கிறது.

    யாரும் யாருக்கும் எதையும் கொடுக்க வேண்டியதில்லை என்பதைவிட ஆண்கள் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்மென்பதை தான் நியாயமானது. அறிவுப்- பூர்வமானது. என்பதைச் சிந்திக்கும் போது உணரலாம்.

    மணவாழ்வில் இணையும் இருவரும் சமமாக இன்பம் அடைகிறார்கள் என்பது உண்மை என்றாலும் மணவாழ்வின் காரணமாக அதிகமான சுமைகள் பெண்கள் மீது தான் உள்ளது. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் தான் அவற்றைச் சுமந்தாக வேண்டும்.

    திருமணம் முடிந்தவுடன் ஆண்கள் தமது வீட்டில் தமது உறவினர்களுடன் வழக்கம் போலவே இருந்து வருவார்கள். ஆனால் பெண்கள் தனது தாய், தந்தை, உற்றார், உறவினர், ஊர் அனைத்தையும் தியாகம் செய்து வருகின்றனர். பிறந்த வீட்டை மறந்து விடுவதை சாதாரணமானதாகக் கருத முடியாது. பெண்களில் இந்த தியாகத்துக்காக ஆண்கள் பெண்களுக்குக் கொடுப்பது தான் நியாயமானது.

    பிறந்த வீட்டில் தனது வேலையைக் கூட பார்த்துப் பழகாதவள் புகுந்த வீட்டில் கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் குடும்பத்திற்காகவும் பணிவிடைகள் செய்கிறாள். நாள் முழுவதும் புகுந்த வீட்டுக்காக உழைக்கிறாள். ஆண்கள் பெண்களின் இந்த தியாகத்துக்காக கொடுப்பது தான் நியாயமானது.

    இருவரும் இல்லறத்தில் ஈடுபட்டதால் பெண் கர்ப்பம் அடைந்தால் அதனால் அவளுக்கு ஏற்படும் சிரமம் சாதரணமானது அல்ல. எதையும் உண்ணமுடியாது. ஆசைப்பட்டதை உண்டவுடன் வாந்தி எடுக்கிறாள்! நாள் செல்லச் செல்ல இயல்பான அவளது எல்லா நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன. இயல்பாக நடக்க முடியாது. இயல்பாக படுக்க முடியாது. இப்படிப் பல மாதங்கள் தொடர்ந்து சிரமம் அடைகிறாள்.

    இவள் அந்த நிலையைக் அடைவதற்குக் காரணமாக இருந்த ஆண் தந்தையாகப் பொவதற்கு கடுகளவு சிரமத்தையும் அடைவதில்லை. இந்த தியாகத்துக்காகவே பெண்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும்  கொடுக்கலாம். அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது மரணத்தின் வாசலைத் தட்டி விட்டு மறுஜென்மம் எடுக்கிறாள். செத்துப் பிழைக்கிறாள். இதற்கு நிகரான ஒரு  வேதனையை உதாரணமாகக் கூட எடுத்துக் காட்ட இயலாது.

    ஆண் மகனின் வாரிசைப் பெற்றுத் தருவதற்காக -அவள் படுகிற சிரமத்திற்காக ஆண்கள் கொடுப்பது தான் நியாயமானதாகும்.. இந்த ஒரு சிரமத்துக்காக கோடி கோடியாக கூட கொடுக்கலாம். குழந்தையைப் பெற்றெடுத்தபின் இரண்டாண்டுகள் தூக்கத்தை தியாகம் செய்து கண் விழித்து பாலூட்டி வளர்க்கிறாள். தனது உதிரத்தையே உணவாகக் கொடுத்து இவனது வாரிசை வளர்க்கிறாள்!
    கழுவிக்குளிப்பாட்டி சீராட்டி அழகு பார்க்கிறாள்! ஒவ்வொரு பருவத்திலும் குழைந்தைக்காக தன்னையே அர்ப்பணித்து விடுகிறாள்! இதற்காகவும் ஆண்கள் தான் கொடுக்கவேண்டும். இப்படிச் சிந்த்தித்துப் பார்த்தால் இன்னும் பல காரணங்களைக் காணலாம். இதன் காரணமாகத் தான் ஆண்கள் பெண்களுக்கு மஹர் எனும் மணக்கொடையை மனமுவந்து வழங்கிட வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

    மணக் கொடை என்பது நூறோ இருநூறோ வழங்கி ஏமாற்றுவது அல்ல! நமது  சக்திக்கும் வசதிக்கும் ஏற்றவாறு தாராளமாக வழங்குவதே மஹர் என்பதை இதிலிருந்து விளங்கலாம். ஒரு  குவியலையே கொடுத்தாலும் அதிலிருந்து திரும்பப் பெறாதீர்கள் (அல்குர்ஆன் 4:20) என்று கூறுவதன் மூலம் மஹர் என்னும் மணக்கொடைக்கு அளவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான்.

    பெண்களுக்கு வரதட்சனைக் கொடுத்து மண முடிக்க வேண்டிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெண்களிடமே கேட்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை உணரவேண்டும். கொடுக்காமல் இருந்தது ஒரு குற்றம். வாங்கியது மற்றொரு குற்றம் என்று இரண்டு  குற்றங்களைச் சந்திக்கும் நிலை மறுமையில் ஏற்படும் என்பதையும் உணரவேண்டும்.

    வரதட்சனை வாங்கும் திருமணங்களை ஜமாஅத்துக்கள் அடியோடு புறக்கணிக்கும் நிலையை உருவாக்கி அல்லாஹ்வின் கட்டளைக்கு உயிரூட்ட வேண்டும். இளைய சமுதாயம் வரதட்சணையினால் ஏற்படும் அவலங்களை உணர்ந்து அந்த  மூடப் பழக்கத்தை உடைத்து எறிந்திட முன்வர வேண்டும்! வல்ல  இறைவன் இதற்கு அருள் புரியட்டும்!

இப்னு மர்யம்

Thursday, April 7, 2011

வரதட்சனை ஒழிப்பில் உலமாக்களின் பங்கு

முஸ்லிம் சமூகத்தில் தலைவிரித்தாடும் பாரிய சமூகக்கொடுமை வரதட்சனை. இந்தக்கொடுமையை ஒழிக்க இன்று காத்திரமான ஓர் இளைஞர் அணியே திரண்டிருக்கின்றது. ஏகத்துவப் பிரச்சாரத்தின் எழுச்சியே இவ்விளைஞர்களை இக்கொடுமைக் கொதிராக அணிதிரள வைத்தது என்றால் அதனை மறுப்பதற்கில்லை. முஸ்லிம் சமூகத்தின் மானத்தையும், மாரியாதையையும் குழிதோண்டிப் புதைத்த இக்கொடுமையை முற்றாக ஒழிக்க வேண்டுமாயின் இச்சமூகத்தின் அனைத்து சக்திகளும் ஒன்றுதிரள வேண்டும்.

அநியாயங்களுக்குத் துணைபோகாத ஒரு தலைமைத்துவத்தால் இக்கொடுமையை நிச்சயம் ஒழிக்க முடியுமென தவ்ஹீத்ஜமாத் உறுதியாக நம்புகின்றது. இக்கொடுமையால் முஸ்லிம் சமூகம் இன்றுவரை சந்தித்து வரும் பின்னடைவுகளை நாம் விளக்கத்தேவையில்லை. முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் இக்கொடுமைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க மார்க்க அறிஞர்கள் முன்வரவேண்டுமென தவ்ஹீத் ஜமாத் இச்சந்தர்ப்பத்தில் வேண்டிக்கொள்கின்றது.

எட்டு வருடங்கள், ஏழு வருடங்கள் மார்க்க அறிவைப் படித்துவிட்டு திருமண நேரத்தில் மாத்திரம் இஸ்லாத்தைக் கடாசி விடும் எத்தனையோ உலமாக்களைப் பார்க்கின்றோம். இதில் வெளிநாடுகளில் படித்து விட்டு வரும் பட்டதாரிகளும் விதிவிலக்கானவர்களல்ல. சீதனக்கொடுமையால் முஸ்லிம் சமூகமே சீரழியும் இந்நேரத்தில் மிம்பர் மேடைகளில் அதனைக் கண்டிக்காமல் அச்சீதனத் திருமணங்களிலும் கலந்து சிறப்பித்து வரும் இவ்வறிஞர்களை என்னவென்று அழைப்பது? தீர்ப்பாளர்களுக்கெல்லாம் தீர்ப்பாளன் அல்லாஹ் போதுமானவன்.

சீதன ஒழிப்பில் ஒரு மார்க்க அறிஞனின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. கொளுத்த சீதனத்தை வாங்கி ஏப்பமிடும் மாப்பிள்ளைகளும் ‘அல் பாத்திஹா’ச் சொல்லி சீதனக்கொடுமையைத் துவக்கி வைக்கும் இவ்வுலமாக்கள் அல்லாஹ்வை அதிகம் அஞ்சிக்கொள்ள வேண்டும்.

அனைத்து சமூகத்தினர்களுக்கும் மிகத்தெளிவாக விளங்கும் இக்கொடுமைக்கு ஆதரவு தெரிவிப்பதும் அல்லது அதனைக் கண்டுகொள்ளாமல் நடந்துகொள்வதும் ஆரோக்கியமானதல்ல.அல்லாஹ்வை அஞ்சி ஜம்இய்யதுல் உலமா நினைத்தால் இன்ஷாஅல்லாஹ் இக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். பொருப்பு வாய்ந்த இப்பணியை விட்டு விட்டு அலட்சியமாகவும், அசமந்தமாகவும் உலமாக்கள் நடந்துகொண்டால் நாளை வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் மார்க்க அறிஞர்களை உதாசீனம் செய்யும் அவல நிலை இச்சமூகத்திற்கு ஏற்படுமென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.


http://saynotodowry.blogspot.com/2011/04/blog-post.html

Thursday, March 31, 2011

வீட்டிலிருந்தபடியே புகார் கொடுக்கலாம்!!!

வரதட்சணை கொடுமைக்காக உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருக்கும் கணவனை சிறையில் அடைக்க மருமகள்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே புகார் கொடுக்கலாம்!!! 
 Online Complaint Registration for NRI's

Friday, February 25, 2011

கொடுப்பதும், எடுப்பதும் (மஹர் மற்றும் வரதட்சணை)

புகழனைத்தும் விண்ணையும் மண்ணையும் அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் நம்மையும் படைத்த தூயோனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே!
எங்கே அமைதி?
அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கும் எண்ணற்ற அருட்கொடைகளில் மிகவும் சிறந்ததும், அனைவரும் விரும்புவதும் ‘அமைதி’ என்று சொன்னால் அது மிகையாகாது. காசு கொடுத்து வாங்க முடியாத பொருள் அது. மற்றவர்களை விடுங்கள், அமைதி மார்க்கமாகிய இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றக்கூடிய நம் சமுதாயத்தில் அமைதி இருக்கிறதா? இலட்சங்கள் அலட்சியமாகப் பறக்கும் ஆடம்பரத் திருமணங்கள் மணல் வீடாகக் கலைந்து போகும் அவலம் தினந்தோறும் நடக்கின்றன. இது ஒரு சமுதாயத்தின் அமைதியைக் குறிக்கிறதா? இல்லை! அலங்கோலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. குடும்ப அமைப்பு சீர்குலைந்தால் மொத்த சமுதாயமுமே சீர் குலைந்து போகும். பின் எங்கே நிம்மதி? இந்நிலைக்குப் புற அம்சங்களைக் காரணம் காட்டாமல் நம் தாழ்வுக்கு நாமே காரணம் என்ற பொறுப்புணர்வுடன் எங்கே தவறினோம் நாம்? என்ற சுய அலசலிலும் இந்நிலையை எப்படி சரி செய்வது என்ற ஆரோக்கியமான அணுகுமுறையிலுமே ஈடேற்றம் பெற முடியும்.
திருமணம் தீனில் ஒரு பகுதி
திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனில் வாழ்விலும் ஒரு முக்கியமான அம்சம் என்பது பொது விதி. ஆனால் இஸ்லாம் ஒருபடி மேலே போய் ‘ஒருவன் திருமணம் புரிந்தால் அவன் இறைமார்க்கத்தில் ஒரு பகுதியை நிறைவேற்றி விட்டான். எஞ்சியவற்றில் அவன் இறைவனை அஞ்சி நடந்து கொள்ளட்டும்.’ (பைஹகி) என்று கூறுகிறது. இன்னும் ஒரு நபிமொழி இக்கருத்தை வலியுறுத்துகிறது. ‘திருமணம் என் வழிமுறை (சுன்னத்). என் வழிமுறையைப் புறக்கணித்தவர் எம்மைச் சார்ந்தவர் அல்லர்.’ (இப்னு மாஜா)
திருமணத்தால் அமைதி கிடைக்கிறது
‘அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான். நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக. மேலும் உங்களிடையே அன்பையும் கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன’ (அல்குர்ஆன் 30:21)
இந்த வசனத்தைப் படித்தால் மட்டும் போதாது சிந்திக்க வேண்டும்..
குழந்தைகள் தான் திருமண வாழ்வின் பரிசு. அவர்கள் பெற்றோர்களுக்குக் கண்குளிர்ச்சியாகவும், பரபரப்பான வாழ்வில் அமைதி கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இறைவன் அனுமதித்த முறையில் இனவிருத்திக்கும் திருமணமே சிறந்தது என்பதை கீழ்வரும் வசனம் உணர்த்துகிறது.
‘மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்.’ (அல்குர்ஆன் 4:1)
கொடுப்பது
கீழே உள்ளவை, நம்பிக்கையாளர்களுக்கு வெளிச்சம் தரக்கூடிய இரு ஒளிகளாகிய குர்ஆன், ஹதீஸ் இவற்றில் ‘கொடுப்பது’ பற்றி உள்ள செய்திகள், கட்டளைகள்.
‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4)
‘நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரை…நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்..’ (அல்குர்ஆன் 33:50)
‘பெண்களை நீங்கள் தீண்டுவதற்க்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்க்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் – அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும். இது நல்லோர் மீது கடமையாகும்.’ (அல்குர்ஆன் 2:236)
‘..அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்டமஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள்…’ (அல்குர்ஆன் 4:24)
‘எந்த நிபந்தனையின் வாயிலாக நீங்கள் பெண்களின் கற்புக்கு உரிமையாளர்களாய் ஆகிறீர்களோ அதுவே மற்றெல்லா நிபந்தனைகளை விட முன்னதாக நிறைவேற்றிட உரிமை பெற்ற நிபந்தனையாகும்.’ (நபிமொழி – புகாரி, முஸ்லிம்)
எடுப்பது
கொடுப்பதைப் பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறியுள்ளவற்றைப் பார்த்தோம். ‘எடுப்பது’ என்பதைப் பற்றி, அதாவது திருமணம் செய்யப் போகும் பெண்ணிடமிருந்தோ அவளுடைய பெற்றோரிடமிருந்தோ ‘எடுப்பது’ பற்றி ஏதாவது இருக்கிறதா என்று குர்ஆனின் 114 அத்தியாயத்திலும் தேடினாலும் ஒரு வசனம் கூட கிடைக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது, தோட்டம், திர்ஹம், தங்கம் இவை மட்டுமல்லாமல் இரும்பு மோதிரம், கேடயம் ஏன் மனப்பாடம் செய்த சூராவைக் கூட மஹராக ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்பவங்களைப் பார்க்கிறோம். ஆனால் பெண் இத்தனை பவுன் நகை, சீர் வரிசை, பலகாரங்கள், இத்தியாதிகள் இவற்றுடன் கணவன் வீட்டுக்குச் சென்றாள் என்று எந்தக் குறிப்பும் இல்லை.
‘எடுப்பது’ எப்படி வந்தது?
பெண் வீட்டாரிடமிருந்து வாங்குவது என்பது மற்ற சமுதாயத்தினரின் செயல். பெண் என்றால் சீதனத்துடன் தான் கணவன் வீட்டிற்குச் செல்ல வேண்டும், மாப்பிள்ளைக்கு வரதட்சணை தர வேண்டும் என்பதெல்லாம் ‘அவர்கள்’ சம்பிரதாயங்கள். இறைவேதத்தையும், நபிவழியையும் முதுகுக்குப் பின்னால் தூக்கிப் போட்டு விட்டு ‘அவர்களை’ப் பின்பற்ற ஆரம்பித்து விட்டோம் நாம்.
ஒரு பேச்சாளர் ‘இப்போது நடக்கும் திருமணங்கள் வியாபாரம் போல் ஆகிவிட்டன.’ என்று குறிப்பிட்டார். இது என்னைச் சிந்திக்க வைத்தது – வியாபாரம் என்றால் பணத்தைக் கொடுத்து ஒரு பொருளை வாங்குவது அல்லது பொருளை விற்று பணத்தைப் பெறுவது. சரி, நம் கையை விட்டுப் பணம் போகும் போது பொருள் நம் கைக்கு வர வேண்டும் – அது தான் வியாபாரம். ஆனால், திருமணத்தில் பணம் நம் கையை விட்டுப் போகிறது, பெண்ணும் போகிறாள், ஆனால், நம் கைக்கு எதுவும் வருவதில்லை. இது எந்த வியாபார விதிக்கும் உட்பட்டதாக இல்லையே.. மோசடி வியாபாரமாக அல்லவா இருக்கிறது!
சந்தையில் மாடு விற்பவன் கூட மாட்டைக் கொடுத்து விட்டுப் பணத்தை எண்ணி வாங்கிக் கொள்கிறான். ஆனால் பெண்ணைப் பெற்றவனோ, பெண்ணையும் கொடுத்து, பொன்னையும் கொடுத்து, சீர் என்ற பெயரில் புழங்குவதற்கு சாமான்களையும் கொடுத்து, பிறகு பணத்தையும் கொடுக்கிறான்.. நம் பெண்கள் மாட்டைவிடவா கேவலமாகி விட்டார்கள்?
இதை பெண்களும் யோசிக்க வேண்டிய விஷயம்.. பொன்னோடும், பொருளோடும் மாமியார் வீட்டுக்குப் போவது தான் பெருமை என்ற எண்ணத்தை பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனோ தெரியவில்லை நம் சகோதரர்களுக்கு தவ்ஹீத் சிந்தனை திருமணமான பிறகு தான் வருகிறது. வாங்கிய வரதட்சணையைத் திருப்பிக் கொடுக்கிறோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் இந்த விழிப்புணர்வு திருமணத்திற்கு முன்பே வந்திருந்தால்வரதட்சணை கொடுக்க வசதியற்ற பெண்ணுக்கு வாழ்வு கிடைத்திருக்கும்.
மறைமுகமாக எடுப்பது
வரதட்சணை என்று ரொக்கமாக வாங்காவிட்டால் தாங்கள் நபிவழியில் திருமணம் புரிந்ததாக சிலர் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள். மார்க்கத்தில் இல்லாத நூதன விழாக்களால் பெண் வீட்டிற்கு எத்தனை வீண் செலவுகள்! பெண் பார்த்தல், நிச்சயதார்த்தம், மருதாணி விழா, ஆடம்பரமான மண்டபம் அல்லது ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நிக்காஹ் விருந்து, மறு வீடு என்று விருந்துக்கு மேல் விருந்தாகவும், பலகார வகைகள், சீர் என்று வித விதமான செலவினங்கள். கட்டில், பீரோ, ஏசி, ஃபிரிஜ் என்பதெல்லாம் காலத்தின் கட்டாயமாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, தங்கம் விற்கும் விலையில் படித்த மாப்பிள்ளை என்றால் குறைந்த பட்சம் ஐம்பது பவுன் என்பது எழுதாத சட்டமாகி விட்டது. இத்தனையையும் கேட்டு வாங்கினால் தானே தவறு? கேட்காமலேயே வரக்கூடிய இடமாகப் போய் பெண் எடுத்தால் வம்பில்லையே.. ‘வீண் செலவு செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்கள்’ (அல்குர்ஆன் 17:27) என்ற திருவசனம் இவர்களின் மனதில் பதியவில்லையா? அல்லது, ‘வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.’ (அல்குர்ஆன் 7:21) என்ற வசனத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார்களா? அல்லது, ‘குறைந்த செலவில் குறைந்த சிரமத்துடன் செய்யப்படும் திருமண நிகழ்ச்சியே சிறந்ததாகும்.’ என்ற நபிமொழியைக் காலத்துக்கு ஒவ்வாதது என்று ஒதுக்கி விட்டார்களா?!!
விளைவுகள்
இன்றைய திருமணங்கள் இறையச்சத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. எப்படி என்று கேட்கிறீர்களா? அல்லாஹ் திருமறையில், வட்டியைப் பற்றி, ‘யார் வட்டி வாங்கித் தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்டவனாக எழுவது போலல்லாமல் (வேறு விதமாக) எழ மாட்டான். இதற்குக் காரணம், அவர்கள் ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கி இருக்கிறான்…’ (அல்குர்ஆன் 2:275) என்றும் ‘ஈமான் கொண்டோரே, இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.’(அல்குர்ஆன் 3:130) என்றும் கூறி நம்மைக் கடுமையாக எச்சரித்திருக்கிறான்.
இருந்தாலும், பலர் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் எல்.ஐ.சி.இன் திருமகள் திருமணத் திட்டம் என்று வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகளில் சேமிக்கத் தொடங்கி விடுகின்றனர். காரணம், அப்படி சேர்க்கும் தொகை அவள் திருமண வயதில் வட்டியோடு குட்டி போட்டு பெருந்தொகையாக இருக்கும். இப்படி ஹராமாக சேர்த்த பணத்தையோ, அல்லது வட்டிக்கு கடன்பட்டோ தான் கைக்கூலியாகவும், நகையாகவும், சீராகவும், கொடுக்கிறார்கள். நினைத்துப் பார்த்தால் அருவருப்பாக இல்லை? ஒருவன், ஹராமான வழியில் பொருளீட்ட காரணமாயிருப்பது யார் என்று யோசித்துப் பாருங்கள். மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையை அஞ்சிக் கொள்ளுங்கள்.
ஹஜ் செய்வது இஸ்லாத்தில் கட்டாயக்கடமை. அதாவது பொருள் வசதியும், உடல்வலிமையும் உள்ளவர்கள் செய்ய வேண்டிய கடமை. ஆனால், உடலில் வலு இருந்தும்;, கையில் வழிச்செலவுக்குப் போதுமான பணம் இருந்தும் புனித பயணத்தைத் தள்ளிப் போட அவர்கள் காரணம் காட்டுவது திருமணத்திற்குப் பெண் இருக்கிறாள். அவளுடைய திருமணக் கடமையை முடித்த பின்பே ஹஜ் செய்ய வேண்டும் என்பதை மார்க்கச் சட்டமாக ஆக்கி விட்டார்கள். மரணம் முந்திக் கொண்டால் ஹஜ் செய்ய முடியாமலே ஆகிவிடும். இதற்கு யார் காரணம் என்பதை சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.
ஏழ்மை அல்லது கொள்கைப் பிடிப்பின் காரணமாகவோவரதட்சணை கொடுக்க முடியாத வீட்டுப் பெண்களில் சிலர் மாற்று மதத்தவர்களைக் கூட மணந்து வாழ்கிறார்கள். ‘இணை வைக்கும் ஒருவனை மணத்தல் கூடாது’ என்பது இறை கட்டளை. அதை மீற காரணம் யார்?
அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கமான இஸ்லாத்தில் பிறந்துள்ள நாம், எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்! ஆனால், துரதிரூஷ்டவசமாக நாம் அனாச்சாரங்களால் அதை எவ்வளவு தூரம் கறைபடுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கறைபடுத்திக் கொண்டிருக்கிறோமே இது நியாயமா? அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தந்துள்ள இஸ்லாமியத் திருமணம் வீண் சம்பிரதாயங்கள் எதுவும் இல்லாத எளிய, அழகிய வாழ்க்கை ஒப்பந்தம். பிறப்பிலிருந்து இறப்பு வரை குர்ஆனும், நபிவழியும் சொல்கிறபடி வாழக் கடமைப்பட்டவர்கள் நாம். மாற்றுமதத்தினரின் வீண் சம்பிரதாயங்களை பின்பற்ற ஆரம்பித்ததனால் நம் சமுதாயத்தில் எத்தனைக் குழப்பங்கள்!
பெண் தேடும் போது, தன்னை விட உயரமான பெண்ணை மணக்க ஒரு ஆண் விரும்புவதில்லை. தன்னை விட உயரம் குறைந்த பெண்ணையே மணக்க விரும்புகிறான். மனோதத்துவரீதியாகப் பார்த்தால், இதற்குக் காரணம், தன் மனைவியை விட தான் உயர்ந்திருக்க வேண்டும், அவள் அன்னாந்து பார்க்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான். உடலளவில் மட்டும் உயர்ந்திருந்தால் போதுமா? உள்ளத்தால் உயருதல் தான் மனிதனுக்கு அழகு. ஒரு பெண்ணும் தன் கணவன் அப்படி உள்ளத்தால் உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவாள். அப்படிப்பட்டவனையே மதிப்பாள். இஸ்லாம் காட்டும் வழிபடி, மஹர் கொடுத்து மணம் முடித்து, உங்களால் இயன்ற அளவு வலிமா விருந்து கொடுத்து உயர்ந்து காட்டுங்கள். உங்கள் இல்லத்திற்குத் தேவையானதை உங்கள் உழைப்பில் வாங்குவது தான் பெருமை.
இன்று எந்த லாபமும் கருதாமல் ஒரு பெண்ணை மணந்தால், அடுத்த தலைமுறையும் திருந்தும். இந்தப் ஈனப் பழக்கம் வேரோடு அழிந்து விடும். நம் உடலை விட்டு உயிர் பிரிந்த வினாடியே நாம் சொந்தம் என்று சொல்லிக் கொள்ளும் எதுவும் நமக்கு சொந்தம் இல்லாமல் போய்விடும். கபன் துணியைத் தவிர நம்முடைய எந்தப் பொருளும் நம்முடன் வரப்போவதில்லை என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ‘எடுப்பது’ என்பது மாற்றார் வழி.. ‘கொடுப்பது’ மட்டுமே நம் வழி!
- A. ஷம்சாத்
நுங்கம்பாக்கம், சென்னை

Friday, February 4, 2011

கல்யாணமாம் கல்யாணம்..

முன்பெல்லாம் ரமளான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு (அதென்ன ஆறு நோன்பு அய்யாறு நோன்பு?) முடிந்தபின் அதிரை களைகட்டும். பெரும்பாலும் வளைகுடாவில் பணிபுரிந்து பணம் ஈட்டிய அதிரைவாசிகள் நோன்புப் பெருநாளைக்கு ஊர் வருவது மட்டுமின்றி, அவர்களின் வருகையையொட்டி ஆங்காங்கே நடைபெற்ற திருமணங்கள்தான் இவற்றிற்குக் காரணம். ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்ட திருமணங்களும் நடைபெற்றதுண்டு.

இந்தியா உலகமயமாக்கலைத் தேர்ந்தெடுத்தபின் அதிரைவாசிகளின் வாழ்க்கையிலும் எண்ணற்ற மாற்றங்கள். பொருளீட்டுவதற்கு வளைகுடாவை மட்டுமே நம்பியிருந்த நம்மவர்கள் மேலை நாடுகளை நாட ஆரம்பித்தனர். பத்தாம் வகுப்பு தவறினால் அல்லது பன்னிரண்டாம் வகுப்பு தேறினால் கடவுச்சீட்டுக்குக்காக காத்திருந்தவர்கள் இப்போது கல்லூரிகளின் அட்மிஷனுக்காகவும் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர். மேற்படிப்பு படிப்பதற்குத் தோதுவாக தங்கள் குழந்தைகளின் கல்வித்தரம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மழலையர் வகுப்பு முதலே சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள கல்விக்கூடங்களில் சேர்க்கின்றனர். குழந்தைகளின் கல்விக்காகவே அதிரையை விட்டு சென்னை போன்ற நகரங்களில் குடியேறுகின்றனர். (கல்விக்கு நம் மக்கள் அளிக்கும் முக்கியத்துவம் மகிழ்வளிக்கிறது.)
பொதுவாக கல்வி நிறுவனங்களுக்கு ஏப்ரல், மே மாதங்கள் விடுமுறை என்பதால் சென்னை வெப்பத்திலிருந்து தப்பிக்க அதிரை வருகின்றனர். அதிரைவாசிகள் பெரும்பான்மையோர் ஊரில் இருப்பார்கள் என்பதால் நோன்புப் பெருநாளுக்குப் பிறகு நடைபெற்று வந்த திருமணங்கள் இப்போது ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகின்றன. ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள், இரண்டு மூன்று வேளை விருந்து என அதிரை அக்னி வெயிலிலும் களை கட்டியிருக்கிறது. இதுவரை 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இரவு வேளைகளில் மட்டுமே நடைபெற்று வந்த திருமணங்கள் காலை, அஸருக்குப்பின், மக்ரிபுக்குப் பின், இஷாவுக்குப் பின் என்று பல நேரங்களில் நடைபெறுவதால் கல்யாண வரவேற்புக்குச் செல்பவர்களும் நடைபயிற்சி செய்வது போல் வரவேற்புகளில் கலந்து கொள்கின்றனர். முன்பு காணப்பட்ட குதிரை சவாரி, பேண்டு வாத்தியங்கள், பைத்து சபா, கக்கிலி வட்டம் போன்றவை (ஒருசில பகுதிகளில் நடைபெற்றாலும்) பெரும்பாலும் குறைந்துவிட்டது. அதிகமான திருமணங்கள் பள்ளிகளிலேயே நடைபெறுகின்றன. தேவையற்ற பல வழக்கங்கள் குறைந்துவிட்டது மகிழ்ச்சியே.
எல்லாம் சரி, வரதட்சணை?

ஆக்கம்: அபூசுஹைமா

Thursday, January 20, 2011

வரதட்சணை கொடுப்பது ஒரு பேஷன்

வரதட்சணை ஒரு வன் கொடுமை என்பதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளவே செய்வார்கள்.(பணத்திமிர்,பேராசை கொண்டவர்களைத் தவிர).இந்த வரதட்சணை எனும் கொடுமையின் காரணமாக,இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும்,பெண்கள் அவதிக்குள்ளாக்கப்பட்டும்,பரிதாபகரமான முறையில் மரணத்தை தழுவும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.சட்டம் புத்தக கட்டுக்களிலும்,ஆள்வோர் மற்றும் பணத்திமிர் கொண்டோரின் சட்டைப்பையில் படுத்து தூங்குகிறது.

இந்த அவலம் எல்லா மத மக்களிடமும்,சாதிகளிலும் புரையோடி,இன்று வரதட்சணை கொடுப்பது ஒரு பேஷன் போன்று ஆகிவிட்டது. இந்த அவலங்களுக்கெல்லாம் யார் காரணம்?இந்த வரதட்சணையால் வரும் கேடு என்ன?அதற்கு இஸ்லாம் என்ன தீர்வு சொல்கிறது? என இன்ஷா அல்லாஹ் அலசுவோம்.
--------------------------------------------------
இனி 
இப்பழக்கம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் இது அவாளின் அன்பளிப்பு. இது ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து முடிவில் தமிழக முஸ்லிம்களை கடிக்க வந்திருக்கும் நச்சுவரம். இவ்வரதட்சணை கொடுமை எய்ட்ஸ் நோயாகப் பரவி ஜாதி மத பேதமின்றி எல்லோரையும் துன்பத்திற்கு உள்ளாக்கி வருகிறது.

எப்படி இந்த இஸ்லாமிய சமுதாயம் வரதட்சணையை வரவேற்று ஏற்றுக்கொண்டது? அதுவும் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த அன்னிய மதத்தவரின் கலாச்சாரமான இவ்வரதட்சணை எப்படி நுழைந்தது?
அன்னிய மதத்தவரின் கலாச்சாரத்தை எந்த ஒரு முஸ்லிம் பின்பற்றுகிறாரோ அவர் அந்த மதத்தைச் சார்ந்தவரே (எம்மைச் சார்ந்தவரல்லர்) என்ற நபி(ஸல்) அவர்களின் அமுத மொழியை எச்சரிக்கையை அறியாதவர்களாக அல்லது அறிந்தும் அலட்சியப்படுத்தியவர்களாக அழிவைத் தரும் இந்த அனாச்சாரத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம். எதற்காக யாருடைய நலனுக்காக நாம் சிந்திக்க வேண்டாமா?


http://peacetrain1.blogspot.com/2009/03/1.html

Tuesday, January 4, 2011

டார்ச்சர் தட்சணை

பவுன் கணக்கில் கொட்டப்படும் நகையோடு
பெண் திருமணமாவது – தங்க தட்சணை!

பணம் வாங்குவது, திருமணச்செலவு முழுமையும்
பெண் வீட்டார் செய்வது – ரொக்க தட்சணை!

வரதட்சணைப் பணத்தை வைத்து வேலை வாங்குவது,
 வளைகுடா நாடுகளுக்குச்செல்வது –வேலை தட்சணை!

வீடு, வாகனங்கள், இதர சொத்துக்கள் பெறுவது – சொத்து தட்சணை!

ஈத், தீபாவளி,  இதர நாட்களை வைத்து பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது –பண்டிகை தட்சிணை!

முக்கியமாக பிரசவ செலவை மாமனார் வீட்டிற்குத் 
தள்ளிவிடுவது – பிரசவ தட்சணை! 

குழந்தை பிறந்தால் அதற்கும் காது குத்து, மொட்டையடிப்பது என்ற பெயரில் பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது – குழந்தை தட்சணை! 

மனைவியை வீட்டுவேலைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது, அதில் பங்கேற்காமல் இருப்பது – வேலைக்காரி தட்சணை! 

மனைவியை இருட்டுக்கு மட்டும் இலவசமாய் பயன்படும் பொருளாய் பார்ப்பது – தாசி தட்சணை! 

எந்த முக்கியமான விசயங்களிலும் மனைவியோடு கலந்தாலோசிக்காமல் இருப்பது – அடிமை தட்சணை! 

மனைவியை அடிப்பது, சித்திரவதை செய்வது – டார்ச்சர் தட்சணை! 

……… மொத்தத்தில் முடிவு பெறாது இந்த வரதட்சணை! ................


http://saynotodowry.blogspot.com/