Thursday, April 7, 2011

வரதட்சனை ஒழிப்பில் உலமாக்களின் பங்கு

முஸ்லிம் சமூகத்தில் தலைவிரித்தாடும் பாரிய சமூகக்கொடுமை வரதட்சனை. இந்தக்கொடுமையை ஒழிக்க இன்று காத்திரமான ஓர் இளைஞர் அணியே திரண்டிருக்கின்றது. ஏகத்துவப் பிரச்சாரத்தின் எழுச்சியே இவ்விளைஞர்களை இக்கொடுமைக் கொதிராக அணிதிரள வைத்தது என்றால் அதனை மறுப்பதற்கில்லை. முஸ்லிம் சமூகத்தின் மானத்தையும், மாரியாதையையும் குழிதோண்டிப் புதைத்த இக்கொடுமையை முற்றாக ஒழிக்க வேண்டுமாயின் இச்சமூகத்தின் அனைத்து சக்திகளும் ஒன்றுதிரள வேண்டும்.

அநியாயங்களுக்குத் துணைபோகாத ஒரு தலைமைத்துவத்தால் இக்கொடுமையை நிச்சயம் ஒழிக்க முடியுமென தவ்ஹீத்ஜமாத் உறுதியாக நம்புகின்றது. இக்கொடுமையால் முஸ்லிம் சமூகம் இன்றுவரை சந்தித்து வரும் பின்னடைவுகளை நாம் விளக்கத்தேவையில்லை. முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் இக்கொடுமைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க மார்க்க அறிஞர்கள் முன்வரவேண்டுமென தவ்ஹீத் ஜமாத் இச்சந்தர்ப்பத்தில் வேண்டிக்கொள்கின்றது.

எட்டு வருடங்கள், ஏழு வருடங்கள் மார்க்க அறிவைப் படித்துவிட்டு திருமண நேரத்தில் மாத்திரம் இஸ்லாத்தைக் கடாசி விடும் எத்தனையோ உலமாக்களைப் பார்க்கின்றோம். இதில் வெளிநாடுகளில் படித்து விட்டு வரும் பட்டதாரிகளும் விதிவிலக்கானவர்களல்ல. சீதனக்கொடுமையால் முஸ்லிம் சமூகமே சீரழியும் இந்நேரத்தில் மிம்பர் மேடைகளில் அதனைக் கண்டிக்காமல் அச்சீதனத் திருமணங்களிலும் கலந்து சிறப்பித்து வரும் இவ்வறிஞர்களை என்னவென்று அழைப்பது? தீர்ப்பாளர்களுக்கெல்லாம் தீர்ப்பாளன் அல்லாஹ் போதுமானவன்.

சீதன ஒழிப்பில் ஒரு மார்க்க அறிஞனின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. கொளுத்த சீதனத்தை வாங்கி ஏப்பமிடும் மாப்பிள்ளைகளும் ‘அல் பாத்திஹா’ச் சொல்லி சீதனக்கொடுமையைத் துவக்கி வைக்கும் இவ்வுலமாக்கள் அல்லாஹ்வை அதிகம் அஞ்சிக்கொள்ள வேண்டும்.

அனைத்து சமூகத்தினர்களுக்கும் மிகத்தெளிவாக விளங்கும் இக்கொடுமைக்கு ஆதரவு தெரிவிப்பதும் அல்லது அதனைக் கண்டுகொள்ளாமல் நடந்துகொள்வதும் ஆரோக்கியமானதல்ல.அல்லாஹ்வை அஞ்சி ஜம்இய்யதுல் உலமா நினைத்தால் இன்ஷாஅல்லாஹ் இக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். பொருப்பு வாய்ந்த இப்பணியை விட்டு விட்டு அலட்சியமாகவும், அசமந்தமாகவும் உலமாக்கள் நடந்துகொண்டால் நாளை வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் மார்க்க அறிஞர்களை உதாசீனம் செய்யும் அவல நிலை இச்சமூகத்திற்கு ஏற்படுமென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.






http://saynotodowry.blogspot.com/2011/04/blog-post.html

No comments:

Post a Comment