Tuesday, December 7, 2010

வாழ்வை சீரழிக்கும் வரதட்சணை

இன்று மனித குலத்தை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் பிரச்னைகள் ஏராளம் ஏராளம். ஏழ்மை, பசி, பிணி, பணத்தாசை பதவிப்பித்து, லஞ்ச லாவண்யம், ஊழல், இனவெறி, நிறவெறி, மொழிவெறி, என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அவற்றில் ஒன்றுதான் இந்த வரதட்சணை. இப்பழக்கம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் இது அவாளின் அன்பளிப்பு. இது ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து முடிவில் தமிழக முஸ்லிம்களை கடிக்க வந்திருக்கும் நச்சுவரம். இவ்வரதட்சணை கொடுமை எய்ட்ஸ் நோயாகப் பரவி ஜாதி மத பேதமின்றி எல்லோரையும் துன்பத்திற்கு உள்ளாக்கி வருகிறது.

    நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே அறியாமைக்கால அரேபியர்களிடம் நிலவிய சில நடைமுறை பழக்க வழக்கங்களை இஸ்லாமிய நெறிமுறைகளாக அங்கீகரித்தார்கள். உதாரணத்திற்கு மிஸ்வாக் செய்தல், கத்னா செய்தல் போன்றவற்றை கூறலாம். அவை மனிதனுக்கு நன்மை பயக்கும் நற்பழக்கங்கள் என்பதால் அவற்றை இஸ்லாத்தில் சுவீகரித்துக் கொண்டார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டல்லவா? அந்த அடிப்படையில் அப்படிப்பட்ட நற்செயலில் ஒன்றானதா இந்த வரதட்சனை? இல்லையே! பின் எப்படி இந்த இஸ்லாமிய சமுதாயம் வரதட்சணையை வரவேற்று ஏற்றுக்கொண்டது? அதுவும் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த அன்னிய மதத்தவரின் கலாச்சாரமான இவ்வரதட்சணை எப்படி நுழைந்தது?

    அன்னிய மதத்தவரின் கலாச்சாரத்தை எந்த ஒரு முஸ்லிம் பின்பற்றுகிறாரோ அவர் அந்த மதத்தைச் சார்ந்தவரே (எம்மைச் சார்ந்தவரல்லர்) என்ற நபி(ஸல்) அவர்களின் அமுத மொழியை எச்சரிக்கையை அறியாதவர்களாக அல்லது அறிந்தும் அலட்சியப்படுத்தியவர்களாக அழிவைத் தரும் இந்த அனாச்சாரத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம். எதற்காக யாருடைய நலனுக்காக நாம் சிந்திக்க வேண்டாமா?

    ஒரு பெண்ணை மண மேடையில் அமர்த்துவதற்காக வரதட்சணை என்னும் மரணப் படுகுழியில் விழும் பெற்றோர்கள் எத்தனை பேர்? குமர் காரியம் என்று பிச்சைக்காரர்களாக கையேந்தி வரும் முஸ்லிம்கள் எத்தனை பேர்? உடன் பிறந்த சகோதரிகளை 'கரை' ஏற்றுவதற்கு கடல் கடந்து சென்று உழைத்து உருக்குலைந்து வளைகுடா நாடுகளில் வாலிபத்தை தொலைத்து நிற்கும் சகோதரர்கள் எத்தனை பேர்? கல்யாணம் என்பதே கானல் நீராகி கண்ணீர் சிந்தி நிற்கும் கன்னியர் எத்தனை பேர்? வாழ்க்கையில் விரக்தியுற்று வேலி தாண்டி ஓடிய வெள்ளாடுகள் எத்தனை, எத்தனை? என்றேனும் இந்த சமுதாயம் இதனை எண்ணிப் பார்த்து இருக்குமா?
    அறியாமைக் கால அரேபியர்களாவது பிறந்த பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தனர். நவீன காலத்தில் வரதட்சணைக்கு பயந்து வயிற்றில் உள்ள கருவை ஸ்கேன் செய்து பெண் என்று தெரிந்தாலே கருவறையை கல்லறையாக்கி விடுகின்றனர். இதையும் மீறி பிறக்கும் பெண் சிசுக்களுக்கு இருக்கவே இருக்கிறது கள்ளிப்பாலும், நெல்மணியும் இதுதான் 21ம் நூற்றாண்டின் நாகரீகம்.

    இதில் எதைப்பற்றியும் சிந்திக்காமல் "வாங்குகின்ற வரதட்சணையை வாங்கிக் கொள்ளுங்கள் கவலையில்லை, பள்ளிவாசலுக்கு செலுத்தவேண்டிய கமிஷனை கொடுத்து விடுங்கள் என்று நிர்வாகிகளும் ஜமாஅத்துகளும் தங்களுடைய கடமையை செவ்வனே செய்து வருகின்றனர்.

    
"அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜக்காத்தை (முறையாக) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வெறெதற்கும் அஞ்சாதவர்களே என குர்ஆன் கூறுகிறது.
 (அல்குர்ஆன் 9:18)

    இத்தகைய தகுதி படைத்தவர்களா தமிழகத்தின் பெரும்பான்மை பள்ளிகளை பரிபாலனம் செய்து வருகின்றனர்? அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாக இருந்தால் தானே பள்ளிவாசலின் வருமானத்திற்கென வரதட்சணைக்கு வக்காலத்து வாங்கமாட்டார்கள்.

    நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். (4:4) என்ற அருள்மறையின் கட்டளைகளை மணமக்களும் அவர்தம் பெற்றோர்களும் எண்ணி பார்க்க வேண்டாமா? ஜம்பதாயிரம், ஒரு லட்சம் என்று மணப்பெண்ணிடம் வரதட்சணை வாங்கிக்கொண்டு அதிலிருந்து சிறு அற்ப தொகை 1001 ரூபாயை மணபெண்ணுக்கு மஹராக வழங்கி மணமுடிக்கும் மகா கெட்டிகாரர்கள் இந்த சமூகத்தில் இருக்கவே செய்கிறார்கள். 'மஹர் வழங்கி மண முடியுங்கள்" என்ற மறை மொழியை அப்படியே பின்பற்றுகிறார்களாம்! அல்லாஹ்வை எமாற்ற நினைக்கும் இந்த அயோக்கியர்கள்.
    அல்லாஹ்வின் தூதர் எதை உங்களிடம் கொண்டு வந்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள், இன்னும் எதைவிட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் (59:7)
    அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் (33:36) 

    மேற்கண்ட இறைவசனங்களின் படி நிராகரித்து வழிகேட்டிலும் குஃப்ரிலும் விழுந்து நாசமாவதா? என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். ஒருத்தியை வாழ வைக்க ஒரு குடும்பத்தையே வறுமையிலும் கடன் தொல்லையிலும் தள்ளிவிடுவது என்ன நீதி? தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு அறிவிலி தொடங்கி வைத்த இந்த தீமை இப்போது காட்டுத்தீயாக பரவி பெரும் நாசம் விளைவித்து வருகின்றது.

"ஜந்தாறு பெண் பிறந்தால் அரசனும் ஆண்டி" இது முதுமொழி. இப்போது "ஒரே ஒரு பெண் பிறந்தால் அவனும் ஓட்டாண்டி" இது புதுமொழி.

வசதிப்படைத்த பெண்ணின் பெற்றோர் சிலர் தங்களின் மகளுக்கு மனமுவந்து அன்பளிப்பாக வழங்குவதை நாம் குறைகூற இயலாது. அதை திருமணத்தன்று செய்யாமல் பிரிதொரு சமயத்தில் மணமக்களுக்கு செய்யலாமே! திருமணத்தன்று பலர் முன்னிலையில் இப்படி செய்வது மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அல்லவா அமைந்து விடுகிறது. இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்? எனவே எக்கோணத்திலிருந்து பார்த்தாலும் இவ்வரதட்சணை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு கொடிய தீமையே என்பது மறுக்க முடியாத உண்மை.

    இத்தீமையை ஒழிக்க அல்லாஹ்வின் தூதர் நம்மிடையே விட்டுச் சென்ற குர்ஆன், சுன்னாவை பின்பற்றுவது ஒன்றுதான் ஒரே வழி. நம் சொந்த விருப்பு வெறுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு அல்லாஹ்வுக்கும் அவனது ரசூலுக்கும் கட்டுப்பட்டு நடப்பது என்ற திடமான உறுதியான முடிவை மணமக்களும், பெற்றோர்களும், ஜாமாஅத்தார்களும் மேற்கொண்டு நடைமுறைக்கு கொண்டு வருவோமேயானால் வரதட்சணை என்ன - மனிதனை வாட்டி வதைக்கும் அத்தனை தீமைகளுக்கும் நாம் சமாதி கட்டிவிடலாம்.
    இறைவன் தன் திருமறையில் "விசுவாசிகளே நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்" என்று கூறுகின்றான். அத்துடன் நம் சந்ததிகளையும் பிள்ளை பிராயம் முதல் இஸ்லாமிய நெறியில் வளர்த்திடல் வேண்டும். அப்போதுதான் அடுத்த தலை முறையாவது வரதட்சணையைப் பற்றி எண்ணிப்பார்க்காது மேலும் திருமணம் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற நிலை மாறி இறையச்சத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்ற நிலை வர வேண்டும்.
    அப்போதுதான் வரதட்சணை ஒழிந்து வாடி வதங்கும் வனிதைகளுக்கு வாழ்வு கிடைக்கும். இல்லறமும் நல்லறமாகி இன்பம் பொங்கும். இன்ஷா அல்லாஹ்.....

 சமீமா அன்சாரி, குடவாசல்


Tuesday, November 30, 2010

நடுத்தெரு பிச்சை -வரதட்சணை

வரதட்சணை என்பது திருமணம் செய்ய இருக்கும் தம்பதியருக்கு பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டாருக்கு கொடுக்கபடும் ஒரு பிச்சை அகும்.



  • வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றாமாகும். இக்குற்றத்திற்கு,ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
  • வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத  சிறைத்தண்டனையுடன், ரூ. 10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
  • வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
  • ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.

Tuesday, November 23, 2010

வரதட்சணை பிரியர்களுக்கு செருப்படி கொடுத்தார் அந்நியன்

புரியாதப் புதிராகவே இருக்கிறது இந்த சொல்...! வரதட்ச்சனை கேட்ட்பவள் பெண்,வரதட்ச்ச்சனையை கொடுப்பவள் பெண்,அதை போராடி வீதிக்கு கொண்டு வருபவள் பெண்,நீதி மன்றத்தில் தீர்ப்பு சொல்லுபவளும் பெண்.
இப்படித் தலைமுறை தலைமுறையாக தொடரும் இந்த தொடருக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியாதா ?
கண்டிப்பாக முடியும்,பெண்கள் மனசு வைத்தால் மட்டுமே முடியும்.

நாற்ப்பது வருசத்திற்கு முன்னாடி நீங்கள் மருமகளாக, மாமியார் வீட்டிற்குப் போகும்போது வரதட்ச்ச்சனைக் கொடுமைக்கு, மாமியார், மற்றும் நாத்தனர்களால் பெரும் துனபத்திர்க்கு ஆளாக்கப் பட்டிர்கள்... சரியா ?
அன்று நீங்கள் மருமகள்கள்...!!! இன்று நீங்கள் மாமியார்கள்...!!!
நீங்கள்தான், இந்த தலைமுறையில் வரக்கூடிய மருமக்கள்மார்களை வரதட்ச்சனைக் கேட்டு தொல்லைப் பண்ணுகிறிர்கள்.
இதே மருமக்கள்மார்தான் இன்னும் இருபது வருஷம் கழித்து வரதட்ச்சனைக் கேட்கப் போகிறார்கள், ஆகமொத்தம் கூட்டி கழிச்சுப் பார்த்தால், பெண்ணிற்கு பெண்ணே எதிரி !!!

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பதற்காகவே பெண் வீட்டார்கள், பயிரிடப்படும் நிலங்களை விற்று, தம் பொண்ணுகளை கரை சேர்த்துள்ளார்கள்,கணவன் என்றப போர்வையில் கைக்கூலி வாங்கியவன் திருடன்தான்.
திருடன் கத்தியைக் காட்டி திருடுவான்,நீயோ தாலியைக் காட்டி திருடுகிறாய்.
வரதட்ச்சனைக் கொடுமையைப் பற்றி எழுத்தின் மூலமாகவும்,சமூக அமைப்பின் மூலமாகவும்,கவிதைகள் மூலமாகவும்,மற்றும் பல போராட்டங்கள் மூலமாகவும், எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்க்காத இந்த கேடுகட்ட சமூகத்திற்கு, அன்னியனைப் போன்றவர்கள் தண்டனைக் கொடுத்தால், குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பு இருக்கும் என நம்புகிறேன்.

தொட்டதெல்லாம் பொன்னாகிறதே என்று, பெண் வீட்டாரை தொல்லைப் படுத்தும் ஆண் வீட்டாரை எச்சரிக்கிறேன்.
வாங்கியது வாங்கியதாகவே இருக்கட்டும், இனி நீங்கள் வரதட்ச்சனை என்று வாயை எடுத்தால் பழுக்க காய வைத்த கடப்பாறையை எடுத்து உங்கள் வாயில் நுழைப்பதற்கு அந்நியனின் சட்டத்தில் இடம் இருக்கிறது,ஆகையால் அத்தகைய குற்றத்திற்கு ஆளாகாமல், நல்ல வீட்டாராக நடந்து கொள்ளுவதற்கு சத்திய பிராமணம் எடுத்துக் கொள்ளுங்கள்.
இல்லையேல் அந்நியனின் வேட்டை தொடரும், இங்கு தீர்ப்பு மட்டும்தான் வழங்கப்படும்,இந்த தீர்ப்பை படித்து விட்டு இந்தியாவில் உள்ள முப்பது கோடி அந்நியன்களும் உங்கள் இல்லம் தேடி வந்து தண்டனைக் கொடுப்பார்கள்.

வரதட்சனைக் கொடுத்து, கணவன் வீட்டிற்குள் போகும் புதுப் பெண்ணே, உன்னையும் எச்சரிக்கிறேன் உன் மகனுக்கும் வரதட்ச்சனைக் கேட்பதற்கு மனக்கணக்கு போட்டிருந்தால், வாசலில் போடும் கோலமாக நினைத்து அதை அழித்துவிடு, இல்லையேல் அந்நியனின் சட்டத்தின் முன்னே நீயும் குற்றவாளிதான், உனக்கும் அதேக் கம்பிதான் தண்டனை.

அந்நியனின் பரிந்துரை :

1 .ஆடம்பர கல்யாணச் செலவைக் குறைத்து விடுங்கள்.

2 .இரு வீட்டாரும் கல்யாணச் செலவை சேர்ந்தே செய்யுங்கள்.

3 .விருந்தை ஒரே இடத்தில் வைத்து இரு வீட்டாரும் இனைந்து கொள்ளுங்கள்.

4 .தங்கம் அணிவதை பெண்கள் புறக்கணியுங்கள்.

5 .சீர்,சீராட்டத்தை மறந்து விடுங்கள்.

இதையும் மீறி நீங்கள் வரதட்சனைப் பணத்தை வாங்கி, வீடு கட்டிடலாம்னு மனக்கோட்டை கட்டி விடாதிர்கள் அழிந்து நாசமாகப் போவிர்கள்,அந்தப் பணத்தை வாங்கித் திங்கப்போகும் நீங்கள் மனித கழிவை தின்பதற்கு சமம்.

பெண்ணையும் கொடுத்து அதை சேர்த்து பொன்னையும் கொடுத்த மக்களின் சாபத்திற்கு ஆளாகிவிடவேண்டாம்.
நண்பர்களே சிந்தியுங்கள்...! பிறகு செயல்படுங்கள்...!

வரதட்ச்சனை மூலமாக வந்தப் பணம் !!!
அது உமது சகோதரனின் அழுகியப் பிணம் !!!
அதை உண்பதால் திருப்தி அடையும் உன் மனம் !!!
இதை என்றும் எழுதிக் கொண்டிருப்பேன் தினம் !!!

அந்நியன் : 2

Sunday, November 21, 2010

அழைக்கிறேன்

வரதட்சணை என்ற அக்கிரமத்துக்கு எதிராக - எழுதவும்,
அது பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு போகவும்
ஊக்கமாக இருந்து வரும்- வரதட்சணை பற்றிய கட்டுரைகள் பல காரசாரமாக எழுதி அதிரை எக்ஸ்பிரஸ்,பீஸ் ரயில்,அதிரை மனம்,அதிரை போஸ்ட்,பாத்திமா ஜோஹரா பிளாக் ச்பாட்களுக்கு நன்றி,இன்னும் கருத்து சொல்லி - வாழ்த்திவரும் சகோதர,சகோதரிகளுக்கு நன்றி.

நீங்கள் உங்களுக்கு தோன்றும் கருத்துக்களை பறிமாறிக்  கொள்ள அழைக்கிறேன்.

தொடர்பு கொள்ள 

nottodowry@gmail.com

Friday, November 19, 2010

வேரறுப்போம் கைக்கூலியை

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் நிலவட்டுமாக.
வரதட்சணை ஒரு சாபக்கேடு
பாவம்
கொடுமை
இஸ்லாத்திற்கு - அதன் கொள்கைகளுக்கு எதிரானது.

அதை எதிர்த்து,
அதனை எதிர்ப்போருடன் இணைந்து - 
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி,
வரதட்சணையை வேரறுக்கவே 
இந்த தளம்.

வாருங்கள் கை கோர்ப்போம்.
 வேரறுப்போம் கைக்கூலியை
இன்ஷா அல்லாஹ்